
காமம் கலக்காத காதல் இரண்டு - ஒன்று 'பிள்ளைக் காதல்', மற்றொன்று 'வெள்ளைக் காதல்'. ஒரு அரை நூற்றாண்டுப் பயணத்தின் முடிவில் ஒரு கிழக் காதலன் தன் காதல் மூதாட்டிக்கு எழுதும் ஒரு காதல் கவிதை :) )
உன் கன்னக்குழி இரண்டிலும்
என் மனம் மீண்டும் மீண்டும்
விழ விரும்புதடி...
சுருக்குப் பை போல் சுருங்கிய
நெற்றியில் என் ஆயுள் முத்தங்கள்
முடிந்து வைத்தாயடி...
உன் சுங்குடிச் சீலை வாசத்தில்
என்ன சொக்குப்பொடி
போட்டாயடி...
முதல் நரை முதல் உன் முழு நரை வரை
வளர் பிறைகள் பலவும்
சேர்ந்தே பார்த்தோமடி...
உன் தளர்நடை காண்கையில்
நம் முதல் தளிர் பழகிய நடை
ஞாபகம் வருகுதடி...
முக்கால் நடைபோடும் என் காதல் மூதாட்டியே!
எக்காலமும் நீயே எனக்குத் துணை, என் கனவு சீமாட்டியே!
எனக்கு முற்றுப்புள்ளி நீ, நான் உனைக் கூட்டியே,
சொர்க்கமோ-நரகமோ எங்கேனும் செல்வேன் மலர்சூட்டியே!
ஒன்றாய் நடந்து செல்வோம், இல்லை நகர்ந்து செல்வோம்
காதல் கனிந்து காமம் கொண்டோம்,
சொர்க்கம் கண்டோம் பருவ காலத்தில்,,
காமம் கரைந்து எழுந்த காதல் இன்று,
இதோ சொர்க்கம் நம் கால்கள் பக்கத்தில்...
0 comments
Post a Comment