Pages

Sunday, June 15, 2014

சேவல்களே உரக்க கூவுங்கள்..

சேவல்களே உரக்க கூவுங்கள்
இந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...

உன் குரல் கேட்டவுடன் விடிந்துவிட
இது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...
பல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..

பூவாசம் பொன் வாசத்துடன்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..
தாளிப்புகளின் ஆரிராரோ கேட்டு
அடுப்புகளின் அடிமனையில்தான்
இவர்களின் ஆனந்த உறக்கம்...
அடுப்பு புகைகளின் படிமங்கள்
அடுக்கடுக்காய் படிந்துக்கிடக்கிறது
இவர்கள் தேகம் முழுவதும்..
விழிகளுக்கும்.. மொழிகளுக்கும்..
புகையின் பூச்சுக்களே ஒப்பனையாகிறது..
இருபது நூற்றாண்டுகளாய்
இவர்கள் உலகம் இதைச்சுற்றியே..
சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..

அந்த பெண்களுக்காக
சேவல்களே கொஞ்சம் உரக்க கூவுங்கள்

இந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..

0 comments

Post a Comment