Pages

Thursday, June 19, 2014

விழாத விழா

கொழுந்துகொஞ்சும் மருக்கொழுந்தில் சொல்லும் சொல்லைக்
குளிப்பாட்டி எனை அழைத்தாள்! அத்தான் நாமும்
விழுந்துபட்டோம் புராணத்தால்! தமிழ்ப்பண்பாட்டின்
விசைநீங்கா விழா! நமக்கு உண்டா? என்றாள்!
எழுந்த விழா பல; தைத்தாய் ஈன்ற பொங்கல்
என்றைக்கும் வீழாத விழா! தான் என்றேன்!
ஆழுந்திவிட்ட புதையலென நம்பொற் காலம்
ஆயிற்றே! ஈங்கென்றாள்! ஆமாம் என்றேன்!
இந்தியரா நாம்? என்றாள்! அப்படித்தான்
இங்கிருப்போர் சொல்கின்றார் என்றேன்! சங்கம்
பந்தியிட்ட புறமறத்தைத் தொலைத்தோம்! பூநூல்
பாழ்வலையுள் பலியானோம்! எதனால்? என்றாள்!
அந்திமுதல் உதிப்பவளே! தமிழருக்குள்
ஆயிரங்கள் சாதிவைத்த மனுதர் மத்தால்
புத்திகெட்டுப்போனோம்! நாம்! புராண நச்சில்
புவிமறத்தை; தமிழ் மரபைத் தொலைத்தோம் என்றேன்.
ஒதுக்கீடு வேலைவாய்ப்பில் எதனால்? என்றாள்
ஒதுக்கிவைத்த அவாள் நன்மை அதனால் என்றேன்!
பதுக்கலிலா உலகு எதைப் பார்க்கும் என்றாள்!
பாய்விரித்த பொதுவுடைமை விருந்தை என்றேன்!
புதுவைர ஒளிநகையால் இராம பாலம்
புல்லோரின் புளுகென்றாள்! ஆமாம் என்றேன்!
மதுவடியும் தமிழாலே விளங்க வைத்தீர்!
மற்றுமொரு கேள்வி! என்றாள்! கேள்! கேள்! என்றேன்!
பொங்கலுக்கு முதல் நாளில் தீயை முட்டிப்
பொசுக்கவரும் போகி விழா எதற்கு? என்றாள்!
செங்கரும்புக் கணுஇடையே! சிந்தனையில்
சிலிர்த்தெழுந்த செங்கதிரே! தமிழ்ப்பகையைப்
பொங்குதீயில் பழம்பாயாய்ப் போட்டுத் தீய்க்கும்
போர்முரச ஒத்திகையே போகி என்றேன்!
இங்கு கொஞ்சம் பாருங்கள் அத்தான்! என்றாள்!
இனியவள்! நெய்ப்பொங்கல்! தந்தாள் உண்டேன்.

0 comments

Post a Comment