Pages

Thursday, June 19, 2014

ஒற்றையடிப் பாதை

புற்களுக்கு நடுவில்
அழகாய் நீண்டுச் சென்றிருக்கும்.
அதன் உருவகம் ஆச்சரியம்
தருபவையாகவே இருந்தது
கால்நடைகளும் கால்தடங்களும்
பூமியில் ரேகையிட்டு வைத்ததோ
என்று கூட எண்ணியிருக்கின்றேன்
ஊரைவிட்டு விலகி பிரதான பாதையிலிருந்து
கிளைத்து ஒரு நதியை போலவே
பயணித்து எல்லைகளை பிணைத்திருக்கும்
விபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்
அதனுடன் சினேகம் இருந்தது
சைக்கிள் டயரை உருட்டி செல்வது
வாத்தியாருக்கு பயந்து தூரத்து
புளியமரத்தில் தஞ்சம்புகச் செல்வது
சக நண்பனுடன் சுற்றி திரிவது என்று
என் பால்யத்தின் தடங்கள் அப்பாதையில்
பதிந்து கிடந்தது.
அப்பாவிற்கு இன்னும் நெருக்கமாக
இருந்தது அப்பாவின் வேலைகளை
சுலபமாக்கவும் சாத்தியப்படுத்தவும்
இதுவே அதிகம் உதவியிருக்கும்
எப்போதும் அப்பாதைமண் அப்பாவின்
வெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட
இதுதான் அழைத்து வரும்
ஒற்றையடிப்பாதையை போலவே
பால்யத்தின் நினைவுகள்
மனவெளியில் நீண்டக் கோடாய்
பதிந்து கிடக்கின்றது அதன் வழியில்
சென்றால் திரும்பவும் பால்யத்திற்கே
சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்துடன்
அதன்றுகில் சாய்ந்த நாற்காலியில்
ஆடிக்கொண்டிருக்கின்றது கழிந்து
போன அகவைகள்.
பின்பற்றுதலையும் ஒன்றுபடுதலையும்
உணர்த்தியபடி புத்தனைபோலவே
மௌனமாய் உறைந்து கிடந்த
அப்பாதை இன்று இல்லை
"பெரிய" நிறுவனங்கள் மணலுக்காக
காடுகளையெல்லாம் வாங்கிக்கொண்ட
பின் ஒற்றையடிப்பாதையின்
தேவை நின்று போய் அழிந்து போனதாக
அப்பா சொன்னார்
பால்யத்தின் இளந்தடங்கள்
பதிந்து கிடந்த அந்த ஒற்றையடிப்பாதையை
மூடியபடி சென்றிருந்த கருத்த
தார்சாலையை பார்க்கையில்
நீண்டக் கல்லறையை போலவே தோற்றமளித்தது எனக்கு.

0 comments

Post a Comment