Pages

Thursday, June 19, 2014

செந்தமிழ் எழுதுக

நஷ்டமும் கஷ்டமும் வேஷமும் - எங்கள்
நற்றமிழ் மொழியினுக் குற்றதோர்
குஷ்டமிச் சொற்களைக் குப்பையில் கொட்டிக்
கொளுத்துக தீயினை கொண்டதால்
புஷ்பங்கள் உள்ளன போயின தூய
பூத்தமிழ்ச் சொற்கள் சிலர்பெரும்
இஷ்டங்கொண் டார்வட மொழியினில் இல்லை
இசைவுநம் மொழியினில் விருப்பிலார்!
வடமொழி வடமொழி வடமொழி - இந்த
வடமொழிச் சொற்களைத் தமிழினில்
உடனொழித் திடுகநற் றிடமுடன் நல்ல
உயிர்த்தமிழ்ச் சொல்வர் வெளியினில்!
உடனொழிக் கத்தெரி யாதவர் முந்தி
உள்ளநம் சொற்களைத் தேடுக
படிப்படி யாயினும் செல்லட்டும் எங்கள்
பைந்தமிழ்ச் சொல் நின்று வெல்லட்டும்!
பக்கத்து வீட்டுக்குச் செல்வீரா உப்புப்
பானையில் முட்டக் கிடக்கையில்
நக்கித் திரிந்த வழக்கமா அன்றி
நாக்குத் திரிந்த பழக்கமா!
தக்கநற் சொற்களில் லாவிடில் நல்ல
தகைமையில் தமிழினை ஆய்ந்தபின்
மிக்கநல் முறையினில் இரவலை நன்று
மேம்பட நந்தமிழ் கொள்ளுமின்!
இலக்கியம் படைப்பவர் எண்ணினால் மிக்க
இலகுவில் இப்பணி யாற்றலாம்
விலக்குக வீண்வட சொற்களை நன்கு
விளக்குக நம்மொழிச் சொற்களை
துலக்குக துணிகஇப் போதிலே தக்க
தூய்மையிற் றமிழ்மொழி அன்னையை
நலக்குறிப் போடுகு டைந்திடின் பண்டை
இலக்கியம் வழங்கிடும் சொல்வளம்!
அளவுக்கு மீறிக் கிடக்குது தமிழின்
அழகை உறுஞ்சிக் கெடுக்குது
இளமைக்கும் இன்னல் விளைக்குது தணித்(து)
இயங்கும் இயல்பை மறைக்குது
உளமிக்க நற்சுவைச் சொற்களும் இந்த
உலகறி யாமல் உளுக்கவோ?
வளமிக்க வண்டமிழ் அறிஞர்கள் உரிய
வடிவைத் தமிழ்பெற எழுதுவீர்!

0 comments

Post a Comment