
வசதியில்லா என் வீட்டில்
அம்மா தரையில் சேலை விரித்தும்
அப்பா கோணியிலும்
நாங்கள் மூவரும் ஒற்றைபாயில்
கோடு கிழித்தும் உறங்கியதுண்டு….
நட்ட நடுஇரவில் கோட்டை தாண்டிய
என் தமையனை தள்ளிவிட்டு
ஒருவருக்கொருவர் கோபம்கொண்டு
சண்டையிட்டு உறக்கம் தொலைத்ததுண்டு……
அம்மா வைத்த கடுங்காபி சுவை
இன்றும் நாக்கில் ஒட்டியபடி……
தாம்பாளத்தில் சோறு போட்டு
ஆளுக்கொருவாய் உருண்டை
சோறு உண்ட நினைவுன்டு……….
அண்ணா என நான் அழைக்காதற்காய்
என்னை கொட்டிய என் தமையனை
பட்டப் பெயர் வைத்து அழைத்து
மீண்டும் அடிவாங்கியதும் நினைவுண்டு…..
பட்டன் இல்லா சட்டையில்
என் வயிறு தெரிய
மேடையில் பரிசு வாங்கிய
புகைப்படம் பார்க்கையில் மனம் கனப்பதுண்டு…..
காலனி இல்லாமல் கால் கொண்டே
நடந்து படித்த பக்கத்து ஊர் பள்ளியும்
பயிற்று வித்த ஆசிரியரும்
மனக் கண்ணில் இன்றும் நினைவில்….
வறுமை என்னை ஒரு போதும்
அழவைத்ததே இல்லை அன்று
அம்மா உடன் இருந்ததால்……
இன்று வறுமையும் இல்லை அம்மாவும் இல்லை…….
கட்டில் மெத்தை இருக்கு
ஓட்டு வீடும் கூட மாடிக்கட்டிடமாச்சி
தினம் ஒன்று உடுத்தவும் இருக்கு
ஆனாலும் நீ மட்டும் இல்லையே அம்மா
வாய்க்கு ருசியா ஆக்கி போடணும்
உன் மடியில படுத்துகிட்டு
கதை பேசி தூங்கணும்
மறுபடியும் பிறப்பாயோ அம்மா நீ எனக்காய்……..
0 comments
Post a Comment