
எப்போதோ பெய்த
உனது மழையில்
இப்போது நனைந்தாலும்
வானவில் முளைக்கிறது
வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளுக்கும்
வர்ணம் வழங்கும்
வாலிபக் களஞ்சியம் நீ
பூக்கள் உடுத்தி
கமழ்ந்து நடக்கும்
நந்தவனம்
மீன்கள் வசிக்க
தடாகம் சுமக்கும்
நதிகளின் குழந்தையாம்
உன் நயனங்களின்
பார்வை பயணங்களில்
தொலைந்தது என்னவோ
என் சயனங்கள்.
இதயக் கரும்பலகையில்
கைப்படாமல்
காதலின் பாடங்களை
மௌனத்தால் எழுதிய
பேராசிரியை நீ.
உதிரா முறுவல் பூக்கும்
உதட்டுக் காம்புகளால்
உதிர்ந்துபோன இதயம்
நட்சத்திரங்கள்
கொட்டிவைத்த உனதின்
பெட்டகத்துள் இருப்பதால்
ஜொலிக்கிறது வாழ்க்கை
உளி இல்லாமல்
கல் இல்லாமல்
உள்ளம் செதுக்கிய
சிற்பமான உன்
வசந்த வருகையில்
நிலவை வீட்டுக்கு
கொண்டுவந்த
பெருமை எனக்கு
திருவிழா காலம்
மட்டுமே தேரில்
திரு உலாப்போகும்
தெய்வங்கள் பார்த்த
எனக்கு
தெய்வங்கள் பார்த்து
அனுப்பிய திருவிழாவே நீதான்.
அன்பை
அஸ்திவாரமாக்கி
எழுப்பப்பட்ட
வாழ்க்கைக் கட்டிடம்
நாளைய மாணவர்கள்
நம்மை கற்கும் பள்ளிக்கூடமாக
என்னை மாற்றிய
உன் கருணை ஒளிபோதும்
நான் ஆயிரம் ஜென்மம்
வாழ்ந்து கொள்வேன்
0 comments
Post a Comment