Pages

Friday, June 20, 2014

வேர் வடிக்கும் கண்ணீர்




வளையலையும் கொலுசையும்
வரவேற்று
சிணுங்கல்..கொஞ்சல்..
வகுப்பெடுக்கிறாய்!
உன்
நிழலைவிட வேகமாக
பின்தொடரும்-என்
பிரியமான காதலையோ
பெரிய காத்திருப்புப்பள்ளங்களில்
தவிக்க விடுகிறாய்!

உன்
விழிகள்
வாசிக்கும் வீணைமொழி!
இதழ்கள்
பூசிக்கும் மோனமொழி!
கன்னங்கள்
நேசிக்கும் நாணமொழி!
வண்ணங்கள்
யாசிக்கும் வர்ணமொழி! -இப்படி
எத்தனையோ
மொழிகளை எதிர்கொண்டதால்
தன்னைப்பற்றி சொல்ல
மொழிமறந்து
தவிக்கிறது காதல்!
எந்த மொழியில்
எடுத்துச்சொல்வேன் என் காதலை ?

என் இதயம்
உயர் நீதிமன்றம்!
உன் இதயம்
உச்ச நீதிமன்றம்!
உயர் நீதிமன்றம்
உடனே வாசித்த தீர்ப்பை
உச்ச நீதிமன்றம்
எப்போது வாசிக்கும்..??

உன்
மைதீட்டிய நயனங்கள்-என்
மெய்தீண்டும் போது
பொய்இல்லா அன்பு
புழுதி கிளப்பிப் புறப்படுகிறது!
காதல் அதைப்
பவுடராய் பூசி
பளபளப்பாகிறது!

அந்தக்காலத்தில்
நம்
இருவருக்குமான கடிதங்களை
இமைகளே எழுதிக்கொண்டன!
கைபேசி தொலைபேசி
இல்லாக்காலத்தில்
கண்பேசி
நாம்
காதல் வளர்த்தோம்!
பார்வைகளாலேயே
நம் காதல்
பனைமரம் போல வளர்ந்தது!
ஆனால்
மரங்களை மனிதர்கள்
வெட்டுவார்கள் என்பதை
மறந்துவிட்டோம்!

நம் காதல்மரம்
வெட்டப்பட்டபோது
வேர் வேறேங்கும்போகவில்லை
என்னோடே இருந்துவிட்டது
அந்த வேர்
அழுவது கண்ணீரையல்ல
கவிதைகளை!

0 comments

Post a Comment