Pages

Sunday, June 8, 2014

நான் உணரும் மரணம்!

மரணம் என்னும் மந்திரம்
என் காதருகில் இசைக்கிறது
அதன் தாக்கம் என் மூளை
நரம்பினில் எதிரொலிக்கிறது
இருள் விலகும் காலை
நான் விழித்திடாமல் போனால்
இழப்பது என்னவென்று
எண்ணியபடி கண் மூடுகிறேன்....
காத்திருந்து கதறிடுவாள் என் மகள்
கரம்பற்றி இழுத்திடுவான் என் மகன்
முகம் தனில் அறைந்திடுவார் என் அவர்
முற்றிலும் மரித்த என் சரீரம் விரைத்துப் போய்
சாவெனும் சங்கினில் வீதி முழங்கி
ஒப்பாரி ஓலமெல்லாம் புடைசூழ
மண் தோண்டி புதைத்திட்டு
மறுநாளில் பாலூற்றி மறந்திடுவார்கள்...
இருக்கையில் இதமாய் பேசிட மறுத்தவர்கள்
இறந்தபின் தன் உள்மனசை கீறி
சிலதுளி நீர் சிந்தி என் சிதை அடங்கிட
வலம் வந்து சிலநிமிட துயர் கொண்டிடுவர்....
என் உடல் மண்ணில் புதைந்தாலும்
உளம் உன்னை நினைத்தபடி
ஊரடங்க காத்திருந்து உனைத்தேடி
வந்திடலாம் ஆன்மா மறித்திடாமல்.....
என் இறப்பின் தகவல் நீ அறிய
உபயம் நான் சொல்வேன் கேள்
உன் அலைபேசி அலறாமல்
இணையத்தில் நுழையாமல்
மெளனம் கொண்டேன் என்றால்
நான் மரித்தேன் என அறிந்துவிடு
சிறுதுளி நீரும் நீ சிந்திவிடாதே
என் பாவம் கரைந்து போய்விடக்கூடாது....
நீ பாவியென நினையாதே என்னை
பாசமெனும் ஒரு நூலால் நான்
நேசம் தொடுத்திருந்தேன்
நெருங்கி எனை மறந்தேன்.....
நான் பேசாத நிமிடங்கள் நீ
பேசத்தொடங்கி விடு உன்
குரல் ஓசை அடங்கும் வரை
உன் காலடியில் நானிருப்பேன்.....

0 comments

Post a Comment