Pages

Sunday, June 15, 2014

ஒரு காதலியின் விடை தெரியாத வினா!

மலர் முகம் துடைக்க வெண்பனி திவலைகளை சேகரம்
செய்து தவலைகளில் கொணர்ந்தாய்,
தளிர்மேனி நீராட குற்றால ஐந்தருவி தன்னை
களவாடி வந்து பொழிந்தாய்,
அழகுடல் உடுத்த பட்டாடையில் உன் தங்க மனதை
சேர்த்து தைத்து தந்தாய்,
அங்கம் முழுதும் மின்னும் தங்க அணிகலன்களாலே
அலங்கரித்து அழகு பார்த்தாய்,
பசி என்றதும், இதோ புசி என்று அமிர்தத்தை அன்பு
குழைத்து உவகையுடன் ஊட்டினாய்,
உலகத்தை நான் பவனி வர உன் தோள்
என்ற பல்லக்கு தந்து தாங்கினாய்,
தங்க பதுமையை அலங்கரித்து வீதியில் வைத்து
வேடிக்கை பார்ப்பரோ என கூறி ஓர் அழகு அரண்மனை பரிசளித்தாய்,
அர்த்தராத்திரியில் வலி என்று அலறி துடித்த போதும்
கரத்தால் என் சிரம் தடவி அருமருந்தாய் ஆசுவாசப் படுத்தினாய்,
எல்லாமாக இருந்து நான் கேட்காமலே எல்லாம் தந்த நீ ...
நான் கேட்ட ஒரே ஒரு பொருள் மட்டும் இன்னும் தாராமல்
இருப்பது ஏனோ?
வேலிக்காக இல்லை எனினும் பிறர் என்னை பரத்தை
என்று செய்யும் கேலிக்காகவாவது விரைந்து வந்து
என் இறைவனே, தலைவனே, காதலனே நீ
மங்கள மஞ்சள் தாலி என்று தான் தருவாயோ?

0 comments

Post a Comment