Pages

Monday, June 16, 2014

பட்டக் காலிலே படுமென்பார்

பட்டக் காலிலே படுமென்பார்
கெட்டக் குடியே கெடுமென்பார்
பழமொழி சொன்னார் அந் நாளே
பார்த்தோம் சான்றாய் இந் நாளே
மீண்டும் மீண்டும் ஜப்பானில்
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
வேதனை செய்வதா சேயிடமே
பட்டது போதும் அவர் துயரம்
பறந்திட அங்கே பல உயிரும்
கெட்டது போதும் இனி மேலும்
கெடுவது வேண்டா ஒரு நாளும்
விட்டிடு பூமித் தாயே நீ
விழுங்க திறவாய் வாயே நீ
தொட்டது அன்னவர் துலங்கட்டும்
தொழில்வளம் முன்போல் விளங்கட்டும்
உழைப்பவர் அவர்போல் உலகில்லை
உண்மை முற்றிலும் ஐயமில்லை
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே
தடுத்தால் உனக்கும் அது தாழ்வே
பிழைக்க அன்னவர் வழி காட்டி
பூமித்தாயே கருணை விழி காட்டி
செழிக்கச் செய்வது உன் செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்
அணுவால் அழிந்தும் மீண்டவரே
அவருக்கு நிகராய் உண்டெவரே
துணிவே அவருக்குத் துணையாமே
தொழிலில் அதுவே இணையாமே
அணுவே இன்றவர் முன்னேற்றம்
அடையச் செய்தது பெரு மாற்றம்
பணிவாய் பூமித் தாய் உன்னை
பாடி முடித்தேன பா(ர்) அன்னை

0 comments

Post a Comment