
காதல் என்னும் தேரில் ஏறிக்
காம தேவன் வருகின்றான்.
கனவில் மிதக்கும் பெண்கள் எல்லாம்
கதவு திறந்து வையுங்கள் !
மனதிற்கேற்ற ரதியைத் தேடி
மன்மத ராஜன் வருகின்றான்.
மயிலைப் போன்ற மங்கையர் எல்லாம்
மாடங்களிலே கூடுங்கள் !
காடு மலைகளில் கானம் பாடிக்
காற்றில் மிதந்து வருகின்றான்.
காதல் கொண்ட பெண்டிர் யாவரும்
காது கொடுத்துக் கேளுங்கள் !
விண்ணுலகத்து மாந்தர் எல்லாம்
விரும்பும் அழகன் வருகின்றான்.
விழிகள் நிறைய ஒரு முறை காண
விரும்பும் பெண்கள் வாருங்கள் !
தாகம் தீர்க்கத் தீயை வார்க்கும்
தந்திரக்காரன் வருகின்றான்.
எரிவது சுகமாய் இருப்பவரெல்லாம்
இங்கே வந்து நில்லுங்கள் !
வேண்டுபவர்க்கு விரும்பிய வண்ணம்
வித்தைகள் கற்றுத் தருகின்றான்.
விரகம் கொண்டு தவிப்பவரெல்லாம்
விபரம் கேட்டுக் கொள்ளுங்கள் !!
0 comments
Post a Comment