உங்கள் மன ஆழத்தில்
என்னை உழுது விதைத்தீர்கள்
நானே பாக்கியவான் .
என் வீட்டு தோட்டத்தில்
எல்லாச் செடிகளும் பூ பூத்தன.
விதைத்தவன்
விடுப்பில் விடைபெற்றபோது
விதைகளும் அழுதன.
வீதியெல்லாம்
பூக்கள் மிதியுண்டு மடிந்தன
மறுப்பாடை உடுத்த பின்பும்
மறுக்கமுடியாமல்
கறுப்பாட்டை பின்தொடர்ந்து
வெள்ளாடுகள் கர்ப்பமாயின.
சலனச் சக்கரத்தில்
பக்கங்களைத் தேடி
பாழாகின நாட்கள்
வட்டத்தில் பயணித்து
வாலிப வீரியம் வீணாய்ப் போனது .
மறுசுழற்சி முறையில்
மறுபடியும் என்னை பிரசவித்து
மாசற்ற ஒன்றாய்
மண்ணுக்கு வரவேண்டும் .
புதுமை பித்தர்கள்
பழைய மதுவை
புது குடுவையில் ஊற்றினார்கள்
அரங்கத்தின் கரவொலி
அடங்க வெகு நேரமானது..
அப்பாவியின் முனங்கல்
அதில் அடங்கிப் போனது
தலையில் முண்டாசுடனும்
தோளில் போர்வையுடனும்
கையில் கோலுடன்
புறப்பட்டான் வெட்டியான்
புது பிணத்தை தேடி .
ஏதோசொல்ல வருகிறார்
எனக்குத்தான் புரியவில்லையென்று
இறக்கை விரித்து பறந்தது
ஆலமரத்து கிளி மட்டுமல்ல
நானும்தான்
0 comments
Post a Comment